search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி"

    பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. இங்கு பிரபல மருத்துவ நிபுணர்கள், நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.

    கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த டாக்டர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் (28), வேறொரு பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் இருவரும் டீன்னிடம் புகார் செய்துள்ளனர். இந்தப்புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் இருவரும் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பெண் டாக்டர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தமிழகத்தின் பிரபல அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×